உடுமலை பகுதியில் தென்னையில் ஊடுபயிராக எலுமிச்சை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உடுமலை பகுதியில் தென்னையில் ஊடுபயிராக எலுமிச்சை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2021-05-21 14:57 GMT
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் தென்னையில் ஊடுபயிராக எலுமிச்சை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கூடுதல் வருவாய்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.தென்னையிலிருந்து கிடைக்கும் தேங்காய்.இளநீர், உரிமட்டை போன்றவற்றின் மூலம் விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகின்றனர். அதேநேரத்தில் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்காக ஒருசில விவசாயிகள் குழுக்களாக இணைந்து நீரா உற்பத்தி செய்து வருகிறார்கள்.மேலும் பெரும்பாலான விவசாயிகள் தென்னையில் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். தென்னையில் ஊடுபயிராக பாக்கு, கோகோ, ஜாதிக்காய், மக்காச்சோளம், சோளம், வாழை மற்றும் காய்கறிப் பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். அந்தவகையில் உடுமலை பகுதியில் ஒருசில விவசாயிகள் தென்னையில் ஊடுபயிராக எலுமிச்சை சாகுபடி செய்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பொதுவாக தென்னை சாகுபடியில் ஒரு பயிருக்கும் மற்றொரு பயிருக்கும் இடையில் அதிக இடைவெளி விடப்படுகிறது.இதன் காரணமாக தென்னந் தோப்புகளில் சிறந்த காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி கிடைக்கும். இதனால் அதிக அளவில் களைச்செடிகள் முளைக்கும் வாய்ப்பு உள்ளது. நாங்கள் முழுமையாக இயற்கை முறையில் சாகுபடி மேற்கொள்வதால் களைக் கொல்லிகள் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஊடுபயிர் சாகுபடியில் மூலம் களைகளை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். அதன்படி கூடுதல் வருவாய் பெறும் வகையில் தென்னையில் ஊடுபயிராக எலுமிச்சை சாகுபடி செய்துள்ளோம்.
இயற்கை பூச்சி விரட்டி
எலுமிச்சை பழங்களைப் பொறுத்தவரை எல்லா சீசனிலும் நல்ல விலை கிடைக்கும். இதனால் எலுமிச்சை சாகுபடியைத் தேர்வு செய்தோம்.நல்ல தரமான நாற்றுகளைத் தேர்ந்தெடுத்து வாங்கி வந்து ஒரு ஏக்கருக்கு 150 செடிகள் என்ற அளவில் நடவு செய்துள்ளோம்.  ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் இடையில் 10 அடி இடைவெளி இருக்கும் வகையில் 2 அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். அந்த குழியில் சாணம், ஆட்டுப்புழுக்கை மற்றும் வேப்பம்புண்ணாக்கு கலந்து அடியுரமாக இட வேண்டும். இதன்மூலம் பூச்சி, நோய் தாக்குதல் இல்லாமல் நன்கு செழித்து வளரும்.  எலுமிச்சையைப்பொறுத்தவரை நடவு செய்த 3 ம் ஆண்டிலிருந்து காய்க்கத் தொடங்கி 20 ஆண்டுகளுக்கு மேல் பலன் தரக்கூடியது. எலுமிச்சை மரத்தை இலைதுளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சி, பழ அந்துப்பூச்சி, குருத்து துளைப்பான், தண்டு துளைப்பான், பழ ஈ, நூற்புழு ஆகிய பூச்சிக்கள் தாக்கும்.நாங்கள் முழுமையாக பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை முறை பூச்சி விரட்டிகளையே பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு விவசாயியும் தனது பகுதியின் பருவநிலை, தனது விளைநிலத்தின் மண் வளம், தண்ணீர் வசதி போன்ற காரணிகளை அறிந்து அதற்கேற்றாற் போல பிரதான பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் வெற்றிகரமான விவசாயியாக மாற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்