இடி-மின்னலுடன் திடீர் மழை: சென்னையில் 3 விமானங்கள் தாமதம்
புறநகர் பகுதிகளில் நேற்று மாலை 4 மணியில் இருந்து திடீரென சூறைக்காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.
ஆலந்தூர்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை 4 மணியில் இருந்து திடீரென சூறைக்காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. மிதமான மழைதான் என்றாலும் இடி, மின்னல் அதிகமாக இருந்தது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு மாலை 4.20 மணிக்கு 42 பயணிகளுடன் புறப்பட வேண்டிய விமானமும், மாலை 4.45 மணிக்கு 18 பேருடன் பெங்களூருக்கு செல்ல வேண்டிய விமானமும் தாமதமாக புறப்பட்டு சென்றன.
அதேபோல் தூத்துக்குடியில் இருந்து 18 பயணிகளுடன் மாலை 5.05 மணிக்கு சென்னையில் தரையிறங்க விமானம் வந்தது. ஆனால் இடி, மின்னலுடன் மழை பெய்ததால் தரையிறங்க தாழ்வாக பறந்த விமானம் மீண்டும் வானில் பறந்து வட்டமடித்தது. சுமார் அரை மணி நேரமாக வானில் வட்டமடித்த தூத்துக்குடி விமானம், மழை ஓய்ந்த பிறகு மாலை 5.35 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.