திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் உள்ள காய்கறி கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு
திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் உள்ள காய்கறி கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
திருவொற்றியூர்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சிகடை போன்றவை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் அரசு அறிவித்துள்ள நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் பொருட்களை வாங்க வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கொரோனா தொற்று பரவல் ஏற்படும் அபாயம் உள்ளதாக கருதிய போலீசார், அங்கிருந்த காய்கறி கடைகளை காலடிப்பேட்டை அடுத்துள்ள எண்ணூர் விரைவு சாலையோரத்தில் தற்காலிகமாக இடமாற்ற திட்டமிட்டு இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தற்காலிகமாக அமைக்கப்படுகின்ற இடத்தில் வியாபாரிகளுக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. அதனால் இதே இடத்தில் காய்கறி வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி தற்காலிகமாக இடமாற்றம் செய்ய உள்ள இடத்துக்கு செல்ல மறுத்து வருகின்றனர்.