கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள்.

Update: 2021-05-21 04:38 GMT
கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த விவேகானந்தா நகர் 5-வது தெருவில் சொந்த வீட்டில் வசித்து வருபவர் மோகனசுந்தரம் (வயது 64). ஓய்வு பெற்ற தனியார் தொழிற்சாலை ஊழியர். உடல் நலக்குறைவால் மோகனசுந்தரம், குடும்பத்தினரோடு சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி தற்போது சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மோகசுந்தரத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் சென்னையில் இருந்து வீட்டுக்கு நேரில் வந்து பார்த்தனர். நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கு இருந்த 2 இரும்பு பீரோக்களை உடைத்து அதில் ஏதாவது நகைகள் இருக்கிறதா? என ஆராய்ந்து பார்த்து உள்ளனர். 2 பீரோக்களிலும் நகைகள் இல்லாததால் வீட்டில் செலவுக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1,000 மற்றும் சில்லறை காசுகளை அள்ளிச்சென்றது தெரியவந்தது.

அதே சமயத்தில் இரும்பு பிரோக்களுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய மரபீரோவில் 10 பவுன் நகைகள் வைக்கப்பட்டிருந்தது. அதற்கான சாவியும் அந்த பீரோவின் மேலே இருந்தது. இந்த பழைய மரபீரோவில் எந்த பொருளும் இருக்க வாய்ப்பில்லை என கருதிய மர்ம நபர்கள் அந்த பீரோவின் அருகில் கூட செல்லவில்லை. இதனால் அதில் இருந்த 10 பவுன் நகை அதிர்ஷ்டவசமாக தப்பியது.

இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்