மறைமலைநகர் நகராட்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் அவதி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மறைமலைநகர் நகராட்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் நகராட்சி பகுதி முழுவதும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ள காரணத்தால் அதிக அளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தினந்தோறும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
எனவே மறைமலைநகர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு தொற்று ஏற்படாதவாறு தடுக்கும் வகையில் மறைமலைநகர் நுழைவு வாயில் பகுதி, பாவேந்தர் சாலை, சக்தி விநாயகர் ஆலயம் அருகே, விண்ணரசி சர்ச் அருகே உள்பட பல்வேறு இடங்களில் நகராட்சி சார்பில் சவுக்கு கட்டையில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஒரு வழியில் மட்டுமே செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மறைமலைநகர் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நகராட்சி பகுதியில் சுகாதார அதிகாரிகள் முகாமிட்டு வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கி சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள மின்சார சுடுகாட்டில் தினந்தோறும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் பல்வேறு பகுதியிலிருந்து கொண்டு வந்து எரிக்கப்படுகிறது. சுடுகாட்டு பகுதியிலும் பிணங்களுடன் ஆம்புலன்ஸ் வரிசையில் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி, நந்திவரம், மண்ணிவாக்கம், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், உள்பட பல்வேறு பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் வேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது.
இதை தடுப்பதற்கு அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் கொரோனா பாதித்தவர்கள் சிங்கபெருமாள் கோவிலில் கொரோனா வகைப்படுத்தும் மையத்திற்கு சென்றால், அங்கு இருக்கும் டாக்டர்கள் நோயாளிகளுக்கு தேவையான எந்த விதமான ஆலோசனைகளும் வழங்குவது கிடையாது. அங்கு வரும் நோயாளிகளிடம் அவர்களின் பெயர், முகவரி வாங்கிக்கொண்டு உங்களை வீட்டில் தனிமை படித்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மூச்சு திணறல் வந்தால் மட்டுமே ஆஸ்பத்திரிக்கு வாருங்கள் என்று அலட்சியமாக கூறுகின்றனர். மேலும் அங்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு கபசுர குடிநீர் கூட வழங்குவது கிடையாது. எந்தவிதமான மருந்து மாத்திரைகளும் சரியான முறையில் வழங்குவதில்லை என்று நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் அங்கு வரும் சில நோயாளிகளை பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் இடத்திற்கு அழைத்து செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதிகள் செய்து தருவது இல்லை.
இதனால் நோயாளிகள் அவர்களே மோட்டார் சைக்கிளில் தனிமைப்படுத்தும் மையத்திற்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சாலையில் செல்லும்போது இருமினாலும், தும்மினாலும், மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இனி மேலாவது நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.