சமூக நல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம்
விருதுநகர் நகராட்சி பகுதியில் முடங்கியுள்ள சமூகநல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தினை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் நகராட்சி பகுதியில் முடங்கியுள்ள சமூகநல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தினை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் திட்டம்
தமிழக அரசு கடந்த ஆண்டு நகராட்சி பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய சமூகநல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது.
அந்த வகையில் விருதுநகர் நகராட்சியிலும் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பிரதான பகுதிகளிலும் நகரில் உள்ள 36 வார்டுகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்காக திட்ட பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முதல் கட்டமாக விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் திட்டத்தின் படியான மையம் தொடங்கப்பட்டது.
முதல் மையம்
இத்திட்டத்தின் விதிமுறைப்படி நகராட்சி நிர்வாகம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் அமைக்க இடம் வழங்க வேண்டும். மேலும் குடிநீர் ஆதாரமும் வழங்க வேண்டும். தனியார் நிறுவனம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்கான எந்திரம் நிறுவி மற்றும் வினியோகம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
இதன்படி ரூ.1-க்கு 1 லிட்டர் குடிநீர் வழங்கவும், 20லிட்டர் குடிநீர் ரூ.7-க்கு வழங்கவும் திட்டமிடப்பட்டது. முதல் மையம் பழைய பஸ் நிலையத்தில் தொடங்கப்பட்டது.
முடங்கியது
ஆனால் இந்த மையம் தொடங்கிய சில நாட்களிலேயே செயல்படாமல் முடங்கிவிட்டது.
இதற்கு காரணம் முறையாக மையம் செயல்பட தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுக்காததுதான் என கூறப்படுகிறது. மேலும் நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் இந்த மையம் அமைக்கப்பட்டு உள்ள இடமும் கழிவறையின் அருகில் இருந்ததால் பொதுமக்கள் இந்த மையத்தில் சென்று குடிநீர் பெறுவதற்கு தயக்கம் காட்டும் நிலையும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நகரில் பிற பகுதிகளில் திட்டப்பணி தொடங்கப்படாமலேயே செயல் இழந்துவிட்டது.
அரசு பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தியது.
ஆனால் இந்த திட்டத்தை முறையாக நகராட்சி நிர்வாகம் பயன்படுத்தாததால் இத்திட்டம் தொடங்கிய நிலையை முடங்கிவிட்டது. இதனைத்தொடர்ந்து தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு நகராட்சி நிர்வாகம் நேரடியாக இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இத்திட்டம் முற்றிலுமாக முடங்கிவிட்டது.
ஆய்வு
எனவே நகராட்சி நிர்வாகம் இனியாவது இது பற்றி ஆய்வு செய்து இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமே நகராட்சி பகுதிகளில் பரவலாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.