புதுச்சேரி மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு; தமிழகத்தில் இருந்து வந்தவர்களை திருப்பி அனுப்பினர்
புதுவை மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
முழு ஊரடங்கு
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.அதன்படி புதுவையில் மதியம் 12 மணி வரை மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.புதுவை மாநில எல்லைகளான கனகசெட்டிகுளம், கன்னியக்கோவில், கோரிமேடு, மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலைகள் வெறிச்சோடின
இந்த நிலையில் அண்டை மாநிலமான தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.காலை நேரத்தில் புதுச்சேரி எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதியில் உள்ள மக்கள் சிலர் இறைச்சி, காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்குவதற்காக புதுச்சேரிக்கு வந்தனர். அவர்களை எல்லை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தி, நீங்கள் எங்கு செல்கிறீர்கள், எதற்காக செல்கின்றீர்கள் என்று கேள்விகளை எழுப்பினர்.
வாக்குவாதம்
அப்போது மருத்துவம் சார்ந்த பணிகளுக்காக வந்தவர்களுக்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்தனர். உரிய காரணங்கள் இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் ஒரு சில இடங்களில் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது.அப்போது போலீசார், புதுவை மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தேவை இல்லாமல் புதுவைக்கு வர அனுமதி இல்லை. நீங்கள் அதையும் மீறி வர விரும்பினால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்து அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் சிலர் எல்லையை ஒட்டிய குறுக்கு சாலைகள் வழியாகவும் புதுவைக்குள் வர முயற்சி செய்தனர். அங்கு போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை திருப்பி அனுப்பினர்.