தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு: சேலத்தில் அனைத்து கடைகளும் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின-வீடுகளில் பொதுமக்கள் முடங்கினர்
சேலத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கான நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகள் வெறிச்சோடின. வீடுகளில் பொதுமக்கள் முடங்கினர்.
சேலம்:
சேலத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கான நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகள் வெறிச்சோடின. வீடுகளில் பொதுமக்கள் முடங்கினர்.
முழு ஊரடங்கு
தமிழக மக்களை உலுக்கி வரும் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எந்த தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் மார்க்கெட்டுகள் என அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை. பால் வினியோகம் மட்டும் நடைபெற்றது. மருந்து கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு இருந்தன. உழவர் சந்தைகள் மற்றும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட காய்கறி சந்தைகள் எதுவும் நடைபெறவில்லை.
சாலைகள் வெறிச்சோடின
சேலம் மாநகரில் செவ்வாய்பேட்டை, கடைவீதி, லீபஜார், பால் மார்க்கெட், அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம், அம்மாபேட்டை, சின்னக்கடை வீதி, குகை, நெத்திமேடு உள்பட பகுதிகளில் காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தளர்வில்லா முழு ஊரடங்கு என்பதால் பிரதான சாலை, இணைப்புச் சாலைகள், ஈரடுக்கு மேம்பாலங்கள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டிருந்தன. அத்தியாவசிய தேவைகள் இன்றி பொதுமக்கள் யாரும் வெளியில் வருகிறார்களா? என்பதை போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வீடுகளில் முடங்கினர்
அதேசமயம் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர். பல்வேறு இடங்களில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மட்டும் ஆம்புலன்ஸ்கள் அதிக அளவில் வந்து சென்றன. கலெக்டர் அலுவலகம் முன்பு டவுன் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளிலிருந்து தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்து வழக்குப்பதிவு செய்ததோடு அவர்களை எச்சரித்து வீடுகளுக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.
பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் கந்தம்பட்டி மேம்பாலம், திருவாக்கவுண்டனூர் மேம்பாலம், இரும்பாலை பிரிவு மேம்பாலம், புதிதாக அமைக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலங்களில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
தன்னார்வலர்கள் உதவி
சேலம் அரசு மருத்துவமனை அருகில் சாலையோரம் சுற்றித்திரிந்த ஆதரவற்றவர்களுக்கு சில தன்னார்வ தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வினியோகம் செய்தனர்.
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் முழு ஊரடங்கு காலங்களில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.