சேலத்தில் கட்டுப்பாடுகளை மீறி திறக்கப்பட்ட 3 இறைச்சி கடைகளுக்கு ‘சீல்’- தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு
சேலத்தில் கட்டுப்பாடுகளை மீறி திறக்கப்பட்ட 3 இறைச்சி கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் கடைக்காரர்களுக்கு தலா ரூ. ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சி பகுதியில் நேற்று தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இறைச்சி மற்றும் மீன் கடைகள் திறக்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அஸ்தம்பட்டி பகுதியில் சிலர் முழு ஊரடங்கை மீறி இறைச்சி கடைகளை திறந்து வியாபாரம் செய்வதாக மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரனுக்கு புகார்கள் வந்தன. இதன் மீது நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை அஸ்தம்பட்டி மற்றும் மரவனேரி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணித்தனர். அப்போது ஊரடங்கை மீறி 3 இறைச்சி கடைகள் திறந்து வியாபாரம் நடைபெறுவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 3 இறைச்சி கடைகளை மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் அந்த 3 கடைக்காரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
முழு ஊரடங்கு நாட்களில் இறைச்சி மற்றும் மீன் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீறி திறந்தால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உரிய அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.