முழு ஊரடங்கு; பாவூர்சத்திரத்தில் வாகன சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
முழு ஊரடங்கையொட்டி பாவூர்சத்திரத்தில் வாகன சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாவூர்சத்திரம், மே:
முழு ஊரடங்கு காரணமாக பாவூர்சத்திரத்தில் போலீசார் வாகன சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முழு ஊரடங்கையொட்டி நேற்று சாலைகள் வெறிச்சோடின.
கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து, வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தென்காசி - நெல்லை நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்திரம் கே.டி.சி நகரில் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையம் சார்பில் வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
சாலைகள் வெறிச்சோடின
இங்கு தென்காசியில் இருந்து நெல்லையை நோக்கி வரும் வாகனங்களும், நெல்லையில் இருந்து தென்காசி நோக்கிச் செல்லும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, வாகன எண்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டது.
மேலும் நேற்று முழு ஊரடங்கு காரணமாக பாவூர்சத்திரம் பகுதி முழுவதும் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. வேன், ஆட்டோ, கார், எந்த வாகனமும் இயங்கவில்லை.