பெரம்பலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை
அரசு அறிவித்த முழு ஊரடங்கு விதிமுறைகள் பெரம்பலூர் மாவட்டத்தில் முறையாக கடைபிடிக்கப்படாததால் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
பெரம்பலூர்,
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக தமிழகத்தில் கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்றால் உயிரிழப்புகளும் மாவட்டத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று கடைப்பிடிக்கப்படும் முழு ஊரடங்கில் மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்ட எந்த கடைகளையும் திறக்கக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதன்படி நேற்று முழு ஊரடங்கால் பெரம்பலூரில் உழவர் சந்தையில் காய்கறி கடைகள் திறக்கப்படவில்லை. ஆனாலும் முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி காலை நேரத்தில் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் மறைவாக சரக்கு வாகனங்கள் மூலமும், வீடுகளிலும் காய்கறிகள் விற்பனை நடைபெற்றது. சில மளிகை கடைகளில் பாதியளவு கதவை (ஷட்டர்) திறந்து வைத்து வியாபாரம் நடந்தது.
மீன், இறைச்சி கடைகளிலும் மறைவாக விற்பனை படுஜோராக நடந்தது.
டீக்கடைகள் திறக்கப்படாத நிலையில், இரு சக்கர வாகனங்களில் டீ விற்பனை நடந்தது. ஒரு சில நகைக்கடை, ஜவுளிக்கடை, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பின்பக்க கதவுகளை திறந்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். தள்ளுவண்டிகளில் வைத்து பழங்கள் விற்பனையும் தெரு, தெருவாக நடந்தது. சில சலூன் கடைகளில் வெளியே கதவை மூடி, உள்ளே முடி திருத்தும் தொழில் நடந்தது. இதனால் காலையில் பொதுமக்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது.
இருப்பினும் திறக்கப்பட்ட கடைகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் முழு ஊரடங்கில் நடைபெறும் திருமண விழாவில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டும், நேற்று பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த திருமணத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
துக்க காரியத்திலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைவிட, அதிகமானோர் பங்கேற்கின்றனர். முழு ஊரடங்கில் சில ஓட்டல்கள் அரசு அறிவித்த குறிப்பிட்ட நேரங்களில் திறக்காமல், முழு நேரமும் திறந்து வைத்து பார்சல் விற்பனை செய்து வந்தனர். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தாலும், சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்றது.
மேலும் காலை நேரத்தில் பெரம்பலூரில் எப்போதும் சாலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வந்த வண்ணம் இருந்தன. போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தால், ஏதாவது காரணத்தை கூறிவிட்டு தப்பிக்க முயற்சிக்கிறார்கள். பகல் நேரத்தில் வெயில் அதிகமாக கொளுத்துவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அப்போது தான் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கிராமப்புற பகுதிகளில் கொரோனா பாதித்த பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில் முழு ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை. முழு ஊரடங்கு விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படாததால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவின் பரவல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூரில் புதிய பஸ் நிலையம், அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அம்மா உணவகங்கள் வழக்கம் போல் இயங்கின. ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டது. முழு ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவை, பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள், பால் விற்பனை நிலையங்கள் ஆகியவை வழக்கம்போல் இயங்கின. நேற்று ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்கப்பட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.