பெங்களூரு மாநகராட்சி அதிகாரி கொரோனாவுக்கு பலி

வென்டிலேட்டர் வசதியுடன் படுக்கை கிடைக்காமல் பெங்களூரு மாநகராட்சி அதிகாரி கொரோனாவுக்கு பலி

Update: 2021-05-16 18:28 GMT
பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சியில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சீனிவாசமூர்த்தி (வயது 54). இவர், சம்பங்கிராம்நகரில் உள்ள கொரோனா மையத்தில் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் சீனிவாசமூர்த்திக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதற்காக கொரோனா மையத்தில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவரது உடல் நிலை திடீரென மோசமானது. இதையடுத்து, வென்டிலேட்டர் வசதியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். 

இதற்காக அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைக்கு மாற்ற முடிவு செய்தார்கள். ஆனால் உடனடியாக அவருக்கு வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்கவில்லை. பல மணிநேர போராட்டத்தை தொடர்ந்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். 

ஆனாலும் சிகிச்சை பலனின்றி சீனிவாசமூர்த்தி இறந்து விட்டார். சரியான நேரத்தில் அவருக்கு உரிய சிகிச்சை கிடைக்காததால் உயிர் இழந்திருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

மேலும் செய்திகள்