தஞ்சை மாவட்டத்தில் 6¾ லட்சம் குடும்பங்களுக்கு முதல் தவணை கொரோனா நிவாரண நிதியாக ரூ.134 கோடி ஒதுக்கீடு

தஞ்சை மாவட்டத்தில் 6¾ லட்சம் குடும்பங்களுக்கு முதல் தவணை கொரோனா நிவாரண நிதியாக ரூ.134 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

Update: 2021-05-16 17:00 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 1,185 ரே‌‌ஷன்கடைகளில் கொரோனா சிறப்பு நிவாரணம் நிதி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

தஞ்சை காவேரி சிறப்பு அங்காடி வளாகத்தில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை ரூ.2 ஆயிரம் வழங்கும் விழா நேற்றுகாலை நடந்தது. இதற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கினார். தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம் முன்னிலை வகித்தார். தஞ்சை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மனோகரன் வரவேற்றார்.

எம்.எல்.ஏ. வழங்கினார்

திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன், குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை ரூ.2 ஆயிரத்தை வழங்கி பேசினார். அப்போது அவர், கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து வந்து நிவாரண உதவித்தொகையை பெற்று செல்ல வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நிவாரண உதவித்தொகை வினியோகத்தை சிறப்பான முறையில் மேற்கொள்ள வட்டம் வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

விழாவிற்கு தலைமை தாங்கிய கலெக்டர் கோவிந்தராவ் பேசியதாவது:-

கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு சில இடர்பாடுகள் இருந்தாலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து தமிழகஅரசின் சார்பில் எந்த அளவுக்கு அவர்களுக்கு உதவ முடியும் என்பதை அறிந்து முதல் தவணையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

கட்டுப்படுத்த முடியும்

இந்த நிதியை பெற வரும் மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில் எல்லா தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். எனவே மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள 1,185 ரே‌‌ஷன் கடைகள் மூலம் 6 லட்சத்து 70 ஆயிரத்து 430 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.134 கோடியே 8 லட்சத்து 60 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உ‌ஷா புண்ணியமூர்த்தி, தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சரக துணை பதிவாளர் குமாரசுந்தரம் நன்றி கூறினார்.

திருவையாறு

திருவையாறு அருகே உள்ள கண்டியூரில் ரேஷன் கடையில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவையாறு துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. நிவாரண நிதியை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி ைவத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகராஜன், ஒன்றியக்குழுத்தலைவர் அரசாபகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்டபாணி, மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

திருவையாறு தாலுகாவில் உள்ள 67 ரேசன் கடைகளிலும் குடும்ப அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில் துணை கலெக்டர் (பயிற்சி) ஜஸ்வந்த்கண்ணன், திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், குடிமைப்பொருள் வழங்கல் துணை தாசில்தார் செல்வராணி, கூட்டுறவு அதிகாரி சசிகலா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்