வேலூரில் வீட்டில் கள்ளநோட்டு பதுக்கி வைத்திருந்த ஆட்டோ டிரைவர்
வேலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.80 ஆயிரம் மதிப்பிலான கள்ளநோட்டுகள், ஜெராக்ஸ் எந்திரம் ஆகியவவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலூர்
ஆட்டோ டிரைவர்
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி அருகேயுள்ள ஒரு பண்ணை வீட்டில் கடந்த 8-ந் தேதி திருட்டு போனது. இதுதொடர்பாக ஏலகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் திருப்பத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சம்பத் (வயது 43) என்பவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பண்ணை வீட்டில் திருடியது சம்பத் என்றும், மேலும் அவர் வேலூர் விருப்பாட்சிபுரத்தில் உள்ள வாடகை வீட்டில் கள்ளநோட்டுகளை அச்சடித்து பதுக்கி வைத்து பொதுமக்களிடம் புழக்கத்தில் விட்டதும் தெரிய வந்தது.
கள்ளநோட்டுகள் பறிமுதல்
அதையடுத்து அந்த வீட்டிற்கு ஏலகிரி போலீசார் சென்று சோதனையிட்டனர். அங்கு ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 200 ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டு, கட்டாக காணப்பட்டன. மேலும் ஜெராக்ஸ் எந்திரமும் இருந்தன. இதுகுறித்து ஏலகிரி போலீசார் வேலூர் பாகாயம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், ஜெராக்ஸ் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருட்டு வழக்கில் சம்பத்தை ஏலகிரி போலீசார் கைது செய்துள்ளனர். எனவே அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்த பின்னர், கள்ளநோட்டு பறிமுதல் செய்தது தொடர்பாக விசாரணைக்கு எடுக்க உள்ளோம். அதன்பின்னரே இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தெரியவரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூரில் வீட்டில் கள்ளநோட்டுகள் மற்றும் ஜெராக்ஸ் எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது பொதுமக்கள், போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.