பந்தலூரில் 18 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது

பந்தலூரில் 18 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பாதுகாப்பு இல்லாமல் இருந்த ஆதிவாசி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

Update: 2021-05-16 15:10 GMT
கூடலூர்,

பந்தலூரில் 18 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பாதுகாப்பு இல்லாமல் இருந்த ஆதிவாசி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

பந்தலூரில் 18 செ.மீட்டர் மழை

அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் (அதி கனமழை எச்சிரிக்கை) விடப்பட்டது. இதனால் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொடர் கனமழை பெய்தது. 

அதிகபட்சமாக  பந்தலூரில் 180 மி.மீட்டரும் (18 செ.மீ), தேவாலாவில் 145 மி.மீட்டரும், சேரங்கோடு, அப்பர்பவானியில் 106 மி.மீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் தாழ்வான மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

முகாம்களில் தங்க வைப்பு

தொடர்ந்து பெய்த மழையால்  காளம்புழா ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் புத்தூர்வயல் ஆற்று வாய்க்காலில் தண்ணீர் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் நள்ளிரவு ஆதிவாசி கிராமங்களுக்கு வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டது.

 இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. ராஜகுமார் தலைமையிலான அதிகாரிகள் புரமணவயல் ஆதிவாசி கிராமத்திலிருந்த 71 பேரை மீட்டு அத்திப்பாளி ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளி முகாமில் தங்க வைத்தனர்.

அத்தியாவசிய தேவைகள்

இதேபோல் தேன்வயல் ஆதிவாசி காலனியில் இருந்த 52 பேரை கொட்டும் மழையில் அழைத்துச் சென்று புத்தூர் வயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் தங்க வைத்தனர்.

 பின்னர் இரு வயல் ஆதிவாசி கிராமத்தில் இருந்த 20 பேரைக் மீட்டு தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் அதிகாரிகள் தங்க வைத்தனர்.

பந்தலூர் தாலுகா அம்பலமூலா அரசு பள்ளியில் 34 பேரும், பொன்னானியில் 13 பேரும் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை செய்து கொடுத்தனர்.

மின்தடை

2-வது நாளாக சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் மின்கம்பியின் மீது விழுந்து மின்கம்பிகள் அறுந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டு அய்யன்கொல்லி, அம்பலமூலா, நம்பியார்குன்னு, சேரம்பாடி, எருமாடு அத்திசால், உள்பட பல கிராமங்கள் இருளில் மூழ்கின. 

ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை 12-வது மைல் பகுதியில் ராட்சத  மரம் விழுந்தது.  இந்த மரத்தை ஊட்டி தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர். 
சேரம்பாடி அருகே சோலாடி ஆறுகளிலும், நீரோடைகளிலும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் சேதம் அடைந்தன. சேரம்பாடியில் இருந்து எடத்தால் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, தடுப்புசுவர் இடிந்து விழுந்தது.  கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மழை அளவு

நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-20.8, நடுவட்டம்-91, கிளன்மார்கன்-18, குந்தா-23, அவலாஞ்சி-54, எமரால்டு-25, கெத்தை-44, கிண்ணக்கொரை-24, அப்பர்பவானி-106, உலிக்கல்-25, 

கூடலூர்-68, தேவாலா-145, செருமுள்ளி-68, பாடாந்தொரை-67, ஓவேலி-47, பந்தலூர்-180, சேரங்கோடு-106 உள்பட மொத்தம் 1,298.6 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 44.79 ஆகும். அதிகபட்சமாக பந்தலூரில் 18 சென்டி மீட்டர் மழை பெய்தது.

மேலும் செய்திகள்