புன்னக்காய் மீனவ கிராமத்தில் பொதுமக்கள் சுய ஊரடங்கு

புன்னக்காயல் மீனவ கிராமத்தில் பொதுமக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர்

Update: 2021-05-16 14:36 GMT
ஆறுமுகநேரி:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த புன்னக்காயல் மீனவ கிராமத்தில் பொதுமக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். கிராம மக்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே ஊரை விட்டு வெளிேய செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தொற்று அதிகரிப்பு
தமிழகத்தில் இரண்டாவது முறையாக மக்களை வாட்டி வதைக்கும் கொரோனா தொற்று அதிகப்படுத்திக் கொண்டு இருக்கும் நிலையில் அரசின் தீவிர நடவடிக்கையாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது‌. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தேவை இல்லாமல் பொதுமக்கள்  வீட்டை விட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. 
அதிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேலும் இறப்பும் அதிகரிக்கிறது.
மீனவ கிராமத்தில் சுய கட்டுப்பாடு
 இந்த கொடுமையான காலத்தில் பொது மக்கள் தங்களை காத்துக் கொள்ள சுய கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்ள வேண்டும். யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் மீனவ கிராம மக்கள் சற்று வித்தியாசமாக செயல்படுகின்றனர். மக்களே ஒன்றுகூடி அவர்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாடு ஏற்படுத்தியுள்ளனர். 
அதாவது கொரோனா அதிகரித்திருக்கும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், அதை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக புன்னக்காயல் மீனவ கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியூருக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளனர்.  மேலும் தவிர்க்க முடியாத சூழலில் எவராவது வந்தால் அவர்களை வெப்ப பரிசோதனைக்கு பின்பு ஊருக்குள் அனுமதிக்கின்றனர். அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்கள் திரும்பி விட வேண்டும் என்ற கட்டுப்பாடு உடன் அவர்களை ஊருக்குள் அனுமதிக்கின்றனர். வாரத்திற்கு ஒரு முறை மட்டும் இந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு வெளியூர்களுக்கு, அருகே உள்ள ஆத்தூர், மற்றும் ஏரலுக்கு செல்லலாம். அதுவும் காலையில் 6 மணிக்கு சென்று 10 மணிக்குள் திரும்பிவிட வேண்டும். அதற்குப் பின்பு வருபவர்களை அவர்கள் அனுமதிப்பதில்லை. இதுபோன்ற பல கட்டுபாடுகள் உள்ளது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்கள் கிடைக்க என்ன செய்வது என்ற குறைகளை தீர்ப்பதற்காக, ஊர் நிர்வாகம் காய்கறிகள், பழங்கள் மற்றும் பொருள்களை ஊருக்கு வெளியே உள்ள செக் போஸ்ட் அருகே கொண்டு வர செய்கின்றனர். பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த செக்போஸ்ட் அருகே சென்று தங்களுக்கு தேவையான பொருள்கள் இருந்தால் அதை மட்டும் வாங்கி செல்கின்றனர். இதனால் வெளியில் இருந்து ஊருக்குள் வியாபாரிகளும் வருவேண்டிய நிலை ஏற்படவில்லை. 
மீன்பிடிக்க செல்லவில்லை
புன்னக்காயலில் கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப் பட்டுவரும் நிலையில் தற்போது தொற்று பரவலை முன்னிட்டு கட்டிட வேலைகள் நடக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதைவிட மிக முக்கியமான விஷயமாக கருதப்படுவது முழுக்க முழுக்க புன்னக்காயல் கிராமம் மீன்பிடித் தொழிலையே நம்பி வாழ்கிறவர்கள். இங்கு சுமார் 240 க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள் உள்ளன. இந்த 240 நாட்டுப்படகு மீனவர்களும் கடந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை அவர் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் கட்டுப்பாட்டோடு இருந்து வருகின்றன.
முன்மாதிரி கிராமம் 
இந்நகரில் அதிகமான கொரோனா தொற்று இல்லாத நிலையில் ஒருவர் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் வெளியூரில் இருந்து வந்தவர் என்று கூறப்படுகிறது. எனவே இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை  தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்டு மற்ற கிராம மக்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர் இக்கிராம மக்கள். 

மேலும் செய்திகள்