ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வினியோகம் தொடங்கியது

நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வினியோகம் தொடங்கியது

Update: 2021-05-15 21:10 GMT
நெல்லை:
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பொதுமக்களுக்கு கொரோனா கால நிவாரணமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தார். இதில் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் குவிவதை தடுக்கும் வகையில் தேதி வாரியாக வருவதற்கான டோக்கன் ஏற்கனவே வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி ரேஷன் கடைகளில் நேற்று தொடங்கியது. நேற்றைய தேதிக்கு வருமாறு டோக்கன் வழங்கப்பட்டிருந்த ரேஷன் கார்டுதாரர்கள் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்றனர். காலை நேரத்திலேயே பணம் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர்.

அவர்களை ரேஷன் கடை ஊழியர்கள் வரிசையாக சமூக இடைவெளியுடன் நிற்க வைத்தனர். பின்னர் ரேஷன் கார்டுகளை பதிவு செய்து கொண்டு தலா ரூ.2 ஆயிரம் நிதியை வழங்கி அனுப்பினார்கள். கொரோனா காலம் என்பதால் உடனுக்குடன் பணத்தை வழங்கி அனுப்பி வைத்தனர். நகர்ப்புறங்களில் நேற்று ஒவ்வொரு கடைகளிலும் 200 பேருக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. கிராமப்புறங்களில் பகுதி நேர கடைகள் என்பதால் அந்தந்த ஊர்களில் கடைகள் திறக்கப்படும் கிழமைகள் அடிப்படையில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்த பணி தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. குறிப்பிட்ட நாட்களில் வாங்க முடியாதவர்கள் டோக்கன் தேதி முடிவடைந்த பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்