சேலம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் பயிற்சி மாணவிகள் 4 பேருக்கு கொரோனா படுக்கை வசதி இன்றி தவிப்பதாக சக மாணவர்கள் கலெக்டரிடம் முறையீடு

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் பயிற்சி மாணவிகள் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். படுக்கை வசதி இன்றி அந்த மாணவிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பதாக சக மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.

Update: 2021-05-15 20:21 GMT
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் பயிற்சி மாணவிகள் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். படுக்கை வசதி இன்றி அந்த மாணவிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பதாக சக மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.
செவிலியர் பயிற்சி மாணவிகள்
சேலம் அரசு செவிலியர் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் பயிற்சி செவிலியர் மாணவிகள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், அரசு செவிலியர் கல்லூரி இறுதி ஆண்டு மாணவ-மாணவிகள் 45-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அதற்கு அவர்கள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தபோது, செவிலியர் பயிற்சி மாணவிகள் 4 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டதாகவும், ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் இல்லை என்றும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
கலெக்டரிடம் முறையீடு
இதனால் கலெக்டரை சந்தித்து முறையிட வந்ததாகவும் கூறினர். இதையடுத்து பயிற்சி நர்சிங் மாணவ-மாணவிகள் கலெக்டர் ராமனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சேலம் அரசு செவிலியர் கல்லூரியில் நாங்கள் இறுதி ஆண்டு நர்சிங் படித்து வருகிறோம். கடந்த 3 மாதங்களாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியை செய்து வருகிறோம். பகலில் 8 மணி நேரமும், இரவு நேரத்தில் 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரையிலும் கொரோனா வார்டில் பணிபுரிந்து வருகிறோம். 
அவ்வாறு பணிபுரியும் போது 4 மாணவிகளுக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஆனால் அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்கு படுக்கை வசதிகள் இல்லை. கொரோனா கால கட்டத்தில் பணிபுரியும் எங்களுக்கு உதவி செய்ய கல்லூரி நிர்வாகமும், அரசு மருத்துவமனையும் முன்வரவில்லை. எனவே கொரோனா பாதிப்புக்கு உள்ளான 4 மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்