சேலம் மாவட்டத்தில் 10.12 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கும் பணி கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்
சேலம் மாவட்டத்தி்ல் 10 லட்சத்து 12 ஆயிரத்து 249 ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கும் பணியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தி்ல் 10 லட்சத்து 12 ஆயிரத்து 249 ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கும் பணியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
ரூ.2 ஆயிரம் நிவாரணம்
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இதில் முதற்கட்ட தவணையாக ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி இந்த மாதமே (மே) வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து அனைத்து ரேஷன்கடைகளிலும் ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்க டோக்கன் வழங்கும் பணி தீவிரமாக நடந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று முதல் கொரோனா நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 1,591 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் 10 லட்சத்து 12 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா நிவாரணத்தொகை முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சேலம் அருகே கன்னங்குறிச்சியில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் நேற்று காலை ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி நடந்தது.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
இதில், மாவட்ட கலெக்டர் ராமன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண நிதியை வழங்கி தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து நிவாரண நிதி வாங்க வந்த பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து ரூ.2 ஆயிரம் தொகையை வாங்கி சென்றனர். ஒவ்வொரு நபருக்கும் 500 ரூபாய் நோட்டுகள் 4 எண்ணிக்கையில் வழங்கப்பட்டது.
கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை வழங்கியது பெரும் உதவியாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். கொரோனா பரவல் காரணமாக ரேஷன் கடையில் நாளொன்றுக்கு 200 பேருக்கு மட்டுமே நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடு
எனவே டோக்கன் பெற்றுள்ள பொதுமக்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள், நேரத்திற்கு ரேஷன் கடைகளுக்கு சென்று முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கொரோனா நிவாரணத்தொகையை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கன்னங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் (பொறுப்பு) மலர்விழி, துணை பதிவாளர் சுருளியப்பன், சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாக இயக்குனர் முருகேசன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.