சேலத்தில் 5 வயது மகளை கொன்று தம்பதி தற்கொலை கொரோனா தொற்று பாதித்ததால் விபரீத முடிவு

சேலத்தில் 5 வயது மகளை கொன்று தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். கொரோனா தொற்று பாதித்ததால் விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

Update: 2021-05-15 20:06 GMT
சேலம்:
சேலத்தில் 5 வயது மகளை கொன்று தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.  ெகாரோனா தொற்று பாதித்ததால் விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளி
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது;-
சேலம் அன்னதானப்பட்டி மூணாங்கரடு திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 31). மாற்றுத்திறனாளியான இவர் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஒரு இனிப்பகத்தில் காசாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பவித்ரா (28). இவர்களது மகள் நந்திதா (5).
இந்த நிலையில் அதே பகுதியில் கோபிநாத்தின் தாய் செங்கமலம் வசித்து வருகிறார். இவர் நேற்று பிற்பகல் தனது மகன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் அவர்கள் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த செங்கமலம் அக்கம்பக்கத்தில் வசித்து வருபவர்களின் உதவியுடன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார்.
3 பேர் பிணமாக கிடந்தனர்
அப்போது வீட்டுக்குள் கோபிநாத், பவித்ரா ஆகிய இருவரும் தூக்குப்போட்டு இறந்த நிலையிலும், நந்திதா கீழே பிணமாகவும் கிடந்தாள். இதை பார்த்து செங்கமலம் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். மேலும் இதுகுறித்து உடனடியாக அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு
மாற்றுத்திறனாளியான கோபிநாத்துக்கு கடந்த சில நாட்களாக இருமலுடன் அவ்வப்போது மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த 9-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு 5 சதவீத கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனால் கோபிநாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறாமல் வீட்டிலேயே தனிமையில் இருந்துள்ளார். 
மேலும் அவர், தான் கொரோனாவுக்கு இறந்து விட்டால், குடும்பத்தினர் என்ன செய்வார்கள்? என்ற அச்சத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மனவேதனை அடைந்த கோபிநாத், பவித்ரா ஆகியோர் தங்களது மகள் நந்திதாவை கொன்றுவிட்டு அவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். மேலும் நந்திதாவை விஷம் கொடுத்து கொன்றார்களா? அல்லது எப்படி கொல்லப்பட்டாள்? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மேலும் இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா தொற்று பாதித்ததால், விபரீத முடிவு எடுத்து, 5 வயது மகளை கொன்று தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்