தாய், மகன் கொரோனாவுக்கு பலியானது அம்பலம்
பூட்டிய வீட்டுக்கு பிணமாக கிடந்த வழக்கு: தாய், மகன் கொரோனாவுக்கு பலியானது அம்பலம்
பெங்களூரு:
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் அருகே பி.இ.எம்.எல். லே-அவுட்டை சேர்ந்தவர் ஹரீஷ். இவர், தனது தாய் ஆர்யம்பா, சகோதரி ஸ்ரீலட்சுமியுடன் வசித்து வந்தார். தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஹரீஷ் பணியாற்றினார். கடந்த 12-ந் தேதி பூட்டிய வீட்டுக்குள் ஹரீஷ், அவரது தாய் ஆர்யம்பா பிணமாக கிடந்தார்கள். ஸ்ரீலட்சுமி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், தாய், சகோதரர் இறந்தது பற்றி அறியாமல் வீட்டை பூட்டிவிட்டு உள்ளே இருந்திருந்தார்.
இதுகுறித்து ஆர்.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் விசாரணையில், தாயும், மகனும் கொரோனாவுக்கு பலியாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதாவது ஹரீஷ், ஆர்யம்பா கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வீட்டு தனிமையில் இருந்துள்ளனர்.
அவர்கள் 2 பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல ஆம்புலன்சுக்கு 8 முறை தொடர்ந்து ஹரீஸ் தனது செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் வராத காரணத்தால் தாயும், மகனும் வீட்டிலேயே பலியானது தெரியவந்துள்ளது. ஸ்ரீலட்சுமி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், அதுபற்றி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் கூட தெரிவிக்காமல் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஹரீஷ் அழைத்ததும் ஆம்புலன்ஸ் வந்திருந்தால் தாயும், மகனும் உயிர் பிழைத்திருப்பார்கள் என்று உறவினர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.