அக்காள்-தங்கை கிணற்றில் பிணமாக மிதந்த மர்மம்

விஜயாப்புரா அருகே மாயமான அக்காள்-தங்கை கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களது சாவில் உள்ள மர்மம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-05-15 19:00 GMT
விஜயாப்புரா:

விஜயாப்புரா அருகே மாயமான அக்காள்-தங்கை கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களது சாவில் உள்ள மர்மம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சகோதரிகள் மாயம்

விஜயாப்புரா மாவட்டம் பசவன பாகேவாடி தாலுகா சாலவாடி கிராமத்தை சேர்ந்த விவசாயியின் மகள்கள் ப்ரீத்தி (வயது 14). ரேணுகா (13). அக்காள்-தங்கையான இவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போய் விட்டனர். அவர்களை அக்கம் பக்கத்தில் தேடியும் 2 பேரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அவர்கள் மாயமானது குறித்து பசவனபாகேவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை கொண்டாலதொட்டி கிராமத்தில் உள்ள கிணற்றில் ப்ரீத்தியும், ரேணுகாவும் பிணமாக கிடந்தார்கள். இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கொலையா?

தகவல் அறிந்ததும் கிராமத்திற்கு விரைந்து வந்த பசவன பாகேவாடி போலீசார், கிணற்றில் இருந்து சகோதரிகளின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது 2 பேரின் கைகளும் ஒரே துப்பட்டாவால் கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

இதன் காரணமாக 2 பேரையும் வேறு இடத்தில் வைத்து மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு, அவர்களது கைகளை கட்டி கிணற்றில் உடல்களை வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆனாலும் 2 பேரும் எப்படி இறந்தார்கள்? என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் சாவில் உள்ள மர்மம் தொியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பசவன பாகேவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்