ஒரே நாளில் 639 பேருக்கு தொற்று: கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை வேகமாக கடந்தது

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 639 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை வேகமாக கடந்தது.

Update: 2021-05-15 18:30 GMT
நாமக்கல்:
639 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 முதல் 350 என்ற அளவில் இருந்தது. இந்தநிலையில், கடந்த 13-ந் தேதி ஒருநாள் பாதிப்பு முதல் முறையாக 400-ஐ கடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் 500-ஐ கடந்த ஒருநாள் பாதிப்பு, நேற்று 600-ஐ கடந்து இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 947 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,586 ஆக அதிகரித்து உள்ளது.
2,779 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 311 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 18 ஆயிரத்து 650 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 157 பேர் இறந்து விட்ட நிலையில், 2,779 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 16,903 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 7-ந் தேதி 18,299 ஆக உயர்ந்தது. பின்னர் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்தது. அதன்படி 10-ந் தேதி 19,186 ஆகவும், 12-ந் தேதி 19,923 ஆகவும் உயர்ந்தது.
21 ஆயிரத்தை வேகமாக கடந்தது
கடந்த 13-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது. அதாவது, அன்று ஒருநாள் மட்டும் 457 பேர் பாதிக்கப்பட்டதால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 20,386 ஆக அதிகரித்தது. இது மேலும் வேகமெடுத்து நேற்று முன்தினம் 20,947 ஆகவும், நேற்று 21,586 ஆக உயர்ந்தது. கடந்த 4 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் கொரோனாவால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை வேகமாக 21 ஆயிரத்தை கடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று முதல் முறையாக 600-ஐ கடந்து இருப்பதால், பொதுமக்கள் தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் எனவும், அவ்வாறு வீட்டை விட்டு வெளியே வந்தால் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்