வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தென்னங்கீற்று தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலியாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தென்னங்கீற்று தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-05-15 18:21 GMT
கரூர்
கொரோனா 2-வது அலை
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததுடன் பஸ் உள்ளிட்ட போக்குவரத்து சேவையை முடக்கி உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதனால் பல்வேறு தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
இதில், தென்னை மட்டைகளை கொண்டு கீற்று பின்னி விற்பனை செய்யும் விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் பந்தல் அமைப்பாளர்கள் அதனை நம்பி உள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் வேலை இன்றி தவித்து வருகின்றனர். இதனால் ஏற்கனவே பின்னப்பட்ட மட்டைகளும் விற்கப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. 
ஏற்றுமதி
இதுகுறித்து பந்தல் அமைக்கும் தொழிலாளர் ஒருவர் கூறுகையில்,  கரூர் மாவட்டத்தில் வாங்கல், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, குளித்தலை, மாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டை பின்னும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு பின்னப்படும் மட்டைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் மட்டைகள் வீடு மற்றும் கோவில்களுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு தொழில்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கோடை காலங்களில் வெயிலில் இருந்து காத்து கொள்ளவும் பயன்படுகிறது. இதன் செலவு குறைவு என்பதால் பலர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
கோரிக்கை
 தற்போது ஊரடங்கு உள்ளதால் பஸ் உள்ளிட்ட போக்குவரத்து இல்லாதது மற்றும் கோவில் திருவிழா நடைபெறாதது உள்ளிட்ட பல காரணங்களால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மட்டை பின்னும் தொழில் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். 
இதனால் தமிழக அரசு உடனடியாக தென்னங் கீற்று தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். என்றார்.

மேலும் செய்திகள்