கெங்கையம்மன் சிரசு திருவிழா

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா குறைந்தளவு பக்தர்களுடன் கோவில் வளாகத்தில் நடந்தது.

Update: 2021-05-15 18:08 GMT
குடியாத்தம்

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா குறைந்தளவு பக்தர்களுடன் கோவில் வளாகத்தில் நடந்தது. 

சிரசு திருவிழா

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில் வேலூர் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட ஒரே திருவிழா கெங்கையம்மன் சிரசு திருவிழா தான்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி நாள் தேரோட்டமும், வைகாசி 1-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறும். அன்று மாலை மிக பிரமாண்டமான வாணவேடிக்கை நடைபெறும். திருவிழாவுக்காக குடியாத்தம் நகரம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள், பெரிய ஊர்கள் எல்லாம் விழாக்கோலம் பூண்டிருக்கும். 

குறைந்தளவு பக்தர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு தடை உத்தரவு அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் திருவிழாக்கள் தடை செய்யப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் திருவிழா நடத்த அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று கலெக்டர் சண்முகசுந்தரம் குறைந்த அளவு கோவில் பணியாளர்கள் மற்றும் குறைந்த அளவு பக்தர்கள் கொண்டு கொண்டு கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்தார். 
சிரசு பொருத்தப்பட்டது

இதனையடுத்து நேற்று  நள்ளிரவு சுமார் 1 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட அம்மன் சிரசு கோவிலின் உள்ளே வலம் வந்தது. தொடர்ந்து சண்டாளச்சி அம்மன் உடலில் கெங்கையம்மன் சிரசு பொருத்தப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்பு சண்டாளச்சி அம்மன் உடலில் இருந்து கெங்கை அம்மன் சிரசு பிரிக்கப்பட்டு மீண்டும் கோவிலுக்குள் வைக்கப்பட்டது. சுமார் 1½ மணி நேரத்தில் திருவிழா நிகழ்வுகள் முடிவு பெற்றது. 

கெங்கையம்மன் சிரசு கோவில் வளாகத்தில் வலம் வந்த போது கோவிலை சுற்றி மாடிகளில் இருந்து பக்தர்கள் பூக்களை தூவி மகிழ்ந்தனர். இதில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளி பின்பற்றியும் அனைவரும் முககவசம் அணிந்து, கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்து கொண்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சிகளில் வி.அமலு எம்.எல்.ஏ., குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், தாசில்தார் வத்சலா, முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர் சவுந்தர்ராஜன், ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், ஊர் தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, கோவில் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத் துறையினர், விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

சாலையில் தடுப்புகள்

வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சிவக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
மேலும் கோவில் அருகே உள்ள தெருக்களின் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு வராவகையில் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதனால் பக்தர்களும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன்  திரும்பி சென்றனர்.
 மாவட்டத்தில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழா சுமார் 1½ மணி நேரத்தில் முடிந்தது.

மேலும் செய்திகள்