கொரோனா வார்டில் டாக்டரை தாக்கிய விவசாயி கைது

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் டாக்டரை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-15 17:51 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் டாக்டரை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
கொரோனா நோயாளி சாவு
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா ஆலத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 56). விவசாயியான இவருடைய அண்ணன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 
அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 10-ந் தேதி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் சுகாதார பணியாளர்களால் அடக்கம் செய்யப்பட்டது.
டாக்டர் மீது தாக்குதல்
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி இரவு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வந்த ரவி, இறந்த தனது சகோதரர் வைத்திருந்த மணிபர்ஸ், ஏ.டி.எம். கார்டு, அடையாள அட்டைகள் உள்ளிட்டவைகளை கொடுக்குமாறு அப்போது பணியில் இருந்த டாக்டர் சுகந்தன் என்பவரிடம் கேட்டுள்ளார். 
அதற்கு டாக்டர், உங்களின் சகோதரர் இறந்தபோது நான் பணியில் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவி, டாக்டர் சுகந்தனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 
விவசாயி கைது
இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து டாக்டர் சுகந்தன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார், அரசு டாக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்