ஊரடங்கு புதிய கட்டுப்பாடு அமல்; தூத்துக்குடி மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காலை 10 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

Update: 2021-05-15 17:24 GMT
தூத்துக்குடி, மே:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காலை 10 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

புதிய கட்டுப்பாடு அமல்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது.
நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதையும் மீறி ஏராளமானோர் வெளியில் சுற்றி வருகின்றனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று முதல் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் மதியம் 12 மணி வரை திறக்கப்பட்டு இருந்த கடைகள் அனைத்தையும் காலை 10 மணிக்கே அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அனைத்து கடைகளும் அடைப்பு

தூத்துக்குடியில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இதனால் மதியம் 12 மணி வரை செயல்பட்டு வந்த கடைகள் அனைத்தும் காலை 10 மணிக்கு      அடைக்கப்பட்டன. மேலும் காய்கறிகள், மளிகை, பலசரக்குக் கடைகள், இறைச்சி, மீன் கடைகள் மட்டுமே காலை 10 மணிவரை திறக்கப்பட்டது.
நேற்று காய்கறி, மளிகை, மற்றும் பலசரக்கு கடைகள், மீன், இறைச்சி கடைகள் மட்டுமே திறந்து இருந்ததால் பொதுமக்கள் காலையிலேயே காய்கறி மார்க்கெட்டிலும் பலசரக்கு கடைகளிலும், இறைச்சி, மீன் கடைகளிலும் குவிந்தனர். இதனால் வ.உ.சி. மார்க்கெட், காமராஜர் காய்கறி மார்க்கெட், வ.உ.சி. கல்லூரி அருகே உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் அனைத்தும் காலையிலேயே மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. மார்க்கெட் அருகே உள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.
மேலும் நேற்று முதல் டீக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டதால் டீக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதேபோல் பூ, பழம், காய்கறி, விற்பனை செய்யும் நடைபாதை கடைகளை திறக்க அனுமதிக்காததால் அனைத்து நடைபாதை கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் நடைபாதை கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. நடைபாதை கடைகள், பழக்கடைகள் அடைக்கப்பட்டதால் மார்க்கெட்டில் வாழைத்தார்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று பெட்ரோல், பங்க்குகள் ஏ.டி.எம். மையங்கள், நாட்டு மருந்து கடைகள், ஆங்கில மருந்து கடைகள், பாலகங்கள், வழக்கம்போல் இயங்கின. ஓட்டல்களிலும் பார்சல் மட்டுமே வழக்கம்போல் கொடுக்கப்பட்டது.

வாகன போக்குவரத்து

நேற்று முதல் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் வந்தாலும் ரோடுகளில் போக்குவரத்து குறையவில்லை. கடைகள் அனைத்தும் 10 மணிக்கு அடைக்கப்பட்டாலும் மதியம் 12 மணி வரை ரோடுகளில் மிகுந்த வாகன போக்குவரத்து காணப்பட்டது. இதனால் காலை 10 மணிக்கு மேல் ரோடுகளில் வந்த வாகனங்களை போலீசார் மறித்து விசாரணை செய்தனர். அதில் தேவையின்றி வெளியில் வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்களை கடுமையாக எச்சரித்து திருப்பி அனுப்பினார். மேலும் ஒரு சில இடங்களில் வாகனங்களில் சென்றவர்கள் மீது ஊரடங்கு மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்