கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனால் காலை 10 மணி வரையே காய்கறி மளிகை கடைகள் இயங்கின.

Update: 2021-05-15 17:13 GMT
விழுப்புரம், 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இதன் அடிப்படையில் தனியாக செயல்படுகின்ற காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள், டீக்கடைகள் ஆகியவை ஏற்கனவே பகல் 12 மணி வரை இயங்கி வந்த நிலையில் நேற்று முதல் அரசு உத்தரவின்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கின. அந்த கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி என்பதால் அந்த நடைமுறைகளுடன் கடைகள் செயல்பட்டன. முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே சமூக விலகலை பின்பற்றி கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. அதேபோல் இறைச்சி, மீன் கடைகளிலும் சமூக விலகலை பின்பற்றியே இறைச்சி வகைகள் விற்பனை செய்யப்பட்டது. 

டீக்கடைகள் மூடல்

டீக்கடைகள் இயங்க அனுமதி கிடையாது என்பதால் அனைத்து டீக்கடைகளும் மூடிக்கிடந்தன. ஓட்டல்களில் பொதுமக்களுக்கு பார்சல் உணவு வழங்கப்பட்டது. அதுபோல் மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் தடையின்றி 24 மணி நேரமும் செயல்பட்டன. 
பெட்ரோல் நிலையங்களும் தடையின்றி இயங்கின. முக கவசம் அணிந்து வந்தவர்களின் வாகனங்களுக்கு மட்டுமே அங்குள்ள ஊழியர்கள், பெட்ரோல்- டீசல் நிரப்பினர். வங்கிகள், ஏ.டி.எம். மையங்களும் எப்போதும்போல் செயல்பட்டன.

நடைபாதை கடைகளுக்கு அனுமதி மறுப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நடைபாதை கடைகள் அனைத்தும் நேற்று இயங்கவில்லை. காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகளின் விற்பனை நேரம் குறைக்கப்பட்டதன் காரணமாக விழுப்புரம் நகரில் காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள் அதிகம் அமைந்துள்ள எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதி மார்க்கெட்டுகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பலர் கொரோனா பரவலை மறந்தும், அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டும் சமூக விலகலை பின்பற்றாமல் நெருக்கமாக நின்றுகொண்டு பொருட்களை வாங்கிச்சென்றனர்.

சாலைகள் வெறிச்சோடின

இந்த கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்கலாம் என்பதால் 9.30 மணியளவில் அரசு அதிகாரிகளும், போலீசாரும் கடைவீதிகள் அமைந்துள்ள பகுதிகளில் ரோந்து சென்றவாறு 10 மணிக்குள் கடைகளை பூட்டிவிட்டு செல்ல வேண்டும் என்று ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தனர். அதன்படி காலை 10 மணியானதும் காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகளை அதன் உரிமையாளர்கள் பூட்டிவிட்டு சென்றனர். 10 மணிக்கு பிறகும் திறக்கப்பட்டிருந்த கடைகளை போலீசார், மூடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுத்தனர்.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள், கடைவீதிகள் காலை 10.30 மணிக்கு மேல் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக மட்டும் ஒன்றிரண்டு பேர் வெளியே சென்றதை காண முடிந்தது.

தீவிர கண்காணிப்பு

இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்று மாவட்டம் முழுவதும் அரசு அதிகாரிகள், போலீசார் ஆய்வு மேற்கொண்டு கண்காணித்தனர். அதேநேரத்தில் விதியை மீறிய பொதுமக்கள் மற்றும் கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்