முக கவசம், தடுப்பூசி தொற்று பரவலை தடுக்கும் ஆயுதங்கள்: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

இந்திராகாந்தி அரசு கலைக்கல்லூரி 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையை புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

Update: 2021-05-15 10:41 GMT

ஆயுஷ் மருத்துவமனை

இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில், புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு கலைக்கல்லூரி 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் மோகன்குமார், இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மலிவு விலை உணவு

இதைத்தொடர்ந்து கவர்னர், தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக வியாழக்கிழமை தோறும் உயர்மட்ட கூட்டம் நடத்தி வருகிறோம். தற்போது அதிக அளவில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க படுக்கைகளை அதிகப்படுத்துவது, மக்கள் குழுக்களை அமைப்பது, பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதிக்கும் போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் போராடி வருகின்றனர். ஊரடங்கையொட்டி மத்திய அரசிடம் இருந்து வந்துள்ள இலவச அரிசி தற்போது மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 40 பாண்லே பாலகங்களில் மலிவு விலையில் உணவு வழங்கப்படுகிறது. இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தும் பாதிப்பு அதிகமாவது வருத்தம் அளிக்கிறது.

தடுப்பூசி

முக கவசமும், தடுப்பூசியும் தொற்று பரவலை தடுக்கும் ஆயுதங்கள். எனவே தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது மீண்டும் தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 60 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட மக்களிடம் தயக்கம் உள்ளது. தடுப்பூசி போட்டால் தான் பாதுகாப்பு கிடைக்கும்.

மேலைநாடுகளில் தடுப்பூசி போட்டதின் மூலம் பலர் பயன் அடைந்துள்ளனர். தற்போது நம்மிடம் 1 லட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசிடம் 6 லட்சம் தடுப்பூசிகள் கேட்டோம். அதில் முதற்கட்டமாக 30 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளது. விரைவில் அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

ஊக்கத்தொகை

2-வது தவணை தடுப்பூசி போடுவதற்கான கால அவகாசம் 12 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் படுக்கைகள் வசதியையும் அதிகரித்து வருகிறோம். புதுவையை பொறுத்தவரை யாரும் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு காத்திருக்கவில்லை. புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 300 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு முன்பாகவே நாம் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அளித்து உள்ளோம்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மேலும் செய்திகள்