ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் காஞ்சீபுரம் சாலைகள் வெறிச்சோடின
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் காரணமாக காஞ்சீபுரம் சாலைகள் வெறிச்சோடின.
காஞ்சீபுரம்,
கொரோனா தொற்று 2-வது அலையின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னையில் நடந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவரப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து காஞ்சீபுரம் நகரில் நண்பகல் 12 மணிக்கு பிறகு பிரதான சாலைகளான காந்தி ரோடு, காமராஜர் சாலை, பஸ் நிலைய பகுதிகள், மூங்கில் மண்டபம் உள்ளிட்ட நகரின் முக்கியமான பகுதிகள் அனைத்தும் யாரும் செல்லாதவாறு போலீசார் தடுப்புகளால் அடைத்தனர்.
நகரின் சிறு தெருக்கள், சந்துகள் போன்றவற்றின் வழியாகவும் யாரும் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு பெரிய கற்களால் தடுப்புகள் அமைத்தனர். இதனால் நண்பகல் 12 மணிக்கு மேல் காஞ்சீபுரம் நகரமே வெறிச்சோடியது.
காஞ்சீபுரம் பஸ் நிலைய பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை முன்னிலையில் நண்பகல் 12 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை நிறுத்தி வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
மூங்கில் மண்டபம் பகுதியில் விஷ்ணுகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேவையில்லாமல் வாகனங்களில் வந்தவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.