கொரோனா மையமாக மாறும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியை கொரோனா மையமாக மாற்ற அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வின்போது ஆலோசனை செய்யப்பட்டது.

Update: 2021-05-14 22:03 GMT
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி
ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரி ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் உள்ளது. இங்கு 600-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு என்று தனியாக 250 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
இங்குள்ள வசதிகள் குறித்து தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தற்போது உள்ள வசதிகள், தினசரி நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கான வசதிகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.
கொரோனா மையம்
பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநகரின் மையப்பகுதியில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரியை முற்றிலும் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு ஆஸ்பத்திரியாக மாற்றுவது குறித்து அவர் ஆலோசனை கூறினார்.
தற்போது உள்ள நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வகை நோய்களுக்கும் தினசரி பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. உள்நோயாளிகளும் அனுமதிக்கப்படுகிறார்கள். பிரசவ சிகிச்சை தனியாக நடந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், கொரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்கவும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியை கொரோனா மையமாக மாற்றும்போது, பிற நோயாளிகளும் பாதிக்கப்படாத நிலையில் நடவடிக்கை எடுக்க இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது.
நுழைவு வாயில்கள்
அதன்படி ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ சிகிச்சை பகுதியை அப்படியே செயல்படச்செய்வது. அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தை ஒட்டிய நுழைவு வாயில் பிரசவ வார்டு மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், பொதுமக்கள், வந்து செல்லும் வழியாக மாற்றுவது. தற்போதைய நுழைவு வாயில் கொரோனா வார்டுக்கு மக்கள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்வது.
மாவட்ட நலப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் அருகே நுழைவு வாயில் அமைத்து அந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்வதுடன், தினசரி புற நோயாளிகளாக வருபவர்கள் அந்த பகுதியிலேயே பரிசோதனை செய்து மருந்து பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்வது என்ற ஆலோசனைகள் கூறப்பட்டு உள்ளன.
இதனால் மிக விரைவில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையமாக மாற இருக்கிறது. விரைவில் இது 450 படுக்கைகளுக்கும் அதிகமாக கொண்ட கொரோனா மையமாக மாறும். அப்போது கூடுதலாக கொரோனா நோயாளிகளை அனுமதித்து, சிறந்த சிகிச்சை அளிக்க முடியும்.

மேலும் செய்திகள்