சேலம் ஆற்றோரம் காய்கறி மார்க்கெட் பழைய பஸ் நிலையத்துக்கு இடமாற்றம்

சேலம் ஆற்றோரம் காய்கறி மார்க்கெட் பழைய பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-14 20:59 GMT
சேலம்:
சேலம் ஆற்றோரம் காய்கறி மார்க்கெட் பழைய பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இடமாற்றம்
சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சூரமங்கலம் உழவர் சந்தை மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் விசாலமான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி சேலம் டவுனில் உள்ள ஆற்றோரம் தினசரி காய்கறி மார்க்கெட் நேற்று முதல் தற்காலிகமாக பழைய பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 
திருமணிமுத்தாறு ஆற்றோரம் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அமைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாகவும், அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் பழைய பஸ் நிலையத்துக்கு காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று அங்கு செயல்பட்ட சந்தைக்கு சேலம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். 
முககவசம்
ஒவ்வொரு கடைக்கும் இடைவெளி விட்டு வியாபாரம் செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். வியாபாரிகளும், காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது அறிவுறுத்தினர். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு காய்கறிகளை வாங்கிச்சென்றதையும் காணமுடிந்தது. இனிமேல் முழு ஊரடங்கு முடியும் வரையிலும் சேலம் பழைய பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை செயல்படும் எனவும், அங்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். 
கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்தபோது சேலம் பழைய பஸ் நிலையத்தில் சுமார் 3 மாதங்களுக்கு மேலாக தற்காலிகமாக மார்க்கெட் செயல்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்