நெற்களம் அமைக்கப்படுமா?

வத்திராயிருப்பு பகுதியில் நெற்களம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-05-14 20:10 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு பகுதியில் நெற்களம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நெல் சாகுபடி 
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், மகாராஜபுரம், சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு முழுவதும் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 
தற்போது அறுவடை சீசன் என்பதால் விவசாயிகள் நெல் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வத்திராயிருப்பு பகுதியில் நெற்களம் இல்லாததால் இப்பகுதி விவசாயிகள் வத்திராயிருப்பு புதிய பஸ்நிலையத்தையும், வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையையும், வத்திராயிருப்பில் இருந்து கூமாப்பட்டி செல்லும் சாலையையும் இப்பகுதி விவசாயிகள் நெற் களமாக மாற்றியுள்ளனர்.
குறைந்த விலை 
மழை காலங்களில் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள நெல் சேதம் அடைந்து வருவதாகவும், இதனால் குறைந்த விலைக்கே நெல் விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- 
வத்திராயிருப்பு பகுதியில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதியில் நெற்களம் இல்லாததால் நெல்லை சாலைகளிலும், பஸ் நிலையங்களிலும் உலர வைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அறுவடை 
 தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே வத்திராயிருப்பு பகுதியில் நெற்களம் அமைத்து கொடுத்தால் நாங்கள் பெரிதும் பயன்பெறுவோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்