வீட்டிலேயே தொழுகை நடத்தி முஸ்லிம்கள் ரம்ஜான் கொண்டா ட்டம்
கொரோனா பரவல் எதிரொலியால் வீட்டிலேயே தொழுகை நடத்தி முஸ்லிம்கள் ரம்ஜான் கொண்டாடினர்.
கரூர்
ரம்ஜான் பண்டிகை
முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று ரம்ஜான். இந்நாளில் முஸ்லிம்கள் நோன்பு இருந்து பள்ளிவாசல்களிலும், மைதானங்களிலும் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் கொண்டாடுவது வழக்கம்.
ஆனால், தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களும் திறக்கப்படவில்லை. மாறாக அவரவர் வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜானை கொண்டாட கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.
வீடுகளில் சிறப்பு தொழுகை
அதன்படி, முஸ்லிம்கள் பள்ளிவாசல்கள், மைதானங்களுக்கு செல்லாமல் புத்தாடை அணிந்து அவரவர் வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி ரம்ஜானை எளிய முறையில் கொண்டாடினர். வழக்கமாக கரூர் நகரப் பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் கோவை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஒன்ற கூடி சிறப்பு தொழுகை நடத்துவர். ஆனால், அரசு அறிவிப்பின்படி ஈத்கா மைதானத்திற்கு செல்லாமல் அவரவர் வீடுகளிலேயே தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.