சீமானின் தந்தை செந்தமிழன் உடல் அடக்கம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2021-05-14 18:18 GMT
இளையான்குடி,

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக்குறைவால் அவரது சொந்த ஊரான சிவகங்ைக மாவட்டம், இளையான்குடி அருகே அரணையூர் கிராமத்தில் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 94. தந்தை இறந்ததை அறிந்ததும் சீமான் சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்தார். தந்தை உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் அவரது உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
சீமானிடம் செல்போனில் பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் அவரது தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் திரைப்பட இயக்குனர்கள் அமீர், கவுதமன், களஞ்சியம் ஆகியோர் சென்னையில் இருந்து அரணையூர் கிராமத்துக்கு வந்து சீமானின் தந்தை செந்தமிழன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
தி.மு.க. சார்பில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் நேற்று செந்தமிழன் உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சீமானுக்கு அவர் ஆறுதல் கூறினார். அ.ம.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, தேர்போகி பாண்டி ஆகியோர் செந்தமிழன் உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்பட பிற கட்சி நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்று மதியம் 2 மணி அளவில் அந்த கிராமத்தில் கபடி மைதானத்தின் அருகே காலி இடத்தில் செந்தமிழன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்