கோலத்தில் தமிழ் எழுத்துகளை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் ஊழியர்
அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கோலத்தில் தமிழ் எழுத்துக்களை வரைந்து பெண் ஊழியர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
கிணத்துக்கடவு
அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கோலத்தில் தமிழ் எழுத்துக்களை வரைந்து பெண் ஊழியர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
ஓய்வு பெற்ற ஊழியர்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சோழனூர் பகுதியை சேர்ந்தவர் அனுத்தமா சீனிவாசன் (வயது 69). அரசு கருவூலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருக்கு சிறுவயது முதலே தமிழ் மீது ஆர்வம் உண்டு. எனவே முன்பு உள்ள காலத்தில் தமிழ் மொழி எப்படி இருந்தது என்பதை பல இடங்களில் தேடி அதை சேமித்தும் வைத்து உள்ளார். இது குறித்து அனுத்தமா சீனிவாசன் கூறியதாவது:-
கோலத்தில் எழுத்துகள்
தமிழில் உள்ள எழுத்துகள் பலருக்கு தெரிவது இல்லை. படிக்க தெரியும், எழுத தெரியும். ஆனால் தமிழில் உள்ள 247 எழுத்துகளையும் சொல்ல வேண்டும் என்றால் அனைவருக்கும் தயக்கம்தான் ஏற்படும்.
குறிப்பாக பெண்களுக்கு தமிழ் எழுத்துக்கள் தெரிந்து இருந்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எளிதில் தெரிந்து விடும். எனவே அதை கருத்தில் கொண்டு கோலத்தில் தமிழ் எழுத்துக்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
பாடப்புத்தகம்
பெண்கள் பொதுவாக வீடுகளின் முன்பு கோலம் போடுவார்கள். அதற்காக சிலர் புத்தகங்களும் வாங்கி வைப்பது உண்டு. எனவே விதவிதமான கோலங்களில் தமிழ் எழுத்துகளை வரைந்து அதை பலருக்கு கொடுத்து உள்ளேன்.
இதை பெண்கள் வீடுகளுக்கு முன்பு போடும்போது தமிழ் எழுத்துகளை பலர் பார்த்து தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். அத்துடன் கோலம் போடுபவர்களுக்கும் அந்த எழுத்துகள் தெரிந்து விடும்.
இதை பாடப்புத்தகத்தில் சேர்த்தால் எளிதில் மாணவர்களும் புரிந்து கொள்வார்கள். எனவே அதற்கு அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.