விழுப்புரம் நகரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்

விழுப்புரம் நகரில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் காற்றில் பறக்க விட்டுவிட்டு அத்தியாவசிய பொருட்கள்வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Update: 2021-05-14 17:30 GMT
விழுப்புரம், 

கொரோனா என்கிற கொடிய உயிர்க்கொல்லி நோயை கட்டுப்படுத்துவதற்கு தமிழகம் முழுவதும் கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதேநேரத்தில் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் கொரோனா பரவாமல் இருக்க முக கவசம் அணிவது, கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், கடைவீதிகளிலும் போலீசார் கடந்த 4 நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஒலிப்பெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் அறிவுரைகளை வழங்கி வந்தனர். ஆனால் இந்த அறிவுரைகளை பொதுமக்கள் சிலர் சரியாகவும், ஒழுங்காகவும் பின்பற்றாததால் கொரோனா தொற்று மேலும் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வருபவர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அலைமோதும் மக்கள் கூட்டம்

அரசு விடுத்துள்ள இந்த எச்சரிக்கையையும் மீறி விழுப்புரம் நகரில் நேற்று பொதுமக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அத்தியாவசிய பொருட்களை வாங்கச்செல்கிறோம் என்ற பெயரில் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தனர். குறிப்பாக முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதா? என்று கேள்வி கேட்கும் அளவிற்கு நகர பகுதியில் மக்கள் சாரை, சாரையாக வெளியே வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர்.
இதனால் விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதி, நேருஜி சாலைகளில் உள்ள காய்கறி கடைகள், மளிகை கடைகள், பலசரக்கு கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பகல் 12 மணியுடன் கடைகள் மூடப்படும் என்பதால் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஏராளமானோர் கடைகளுக்கு வந்து பொருட்களை வாங்கிச்சென்றனர். இவர்கள் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் அதனை காற்றில் பறக்க விட்டு விட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்சென்றனர். இதனால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுமக்களின் அஜாக்கிரதையால் கொரோனா 3-வது அலை முன்கூட்டியே பரவலாகி விடும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம்சாட்டினர்.

அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுமா?

அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து தேவையின்றி வெளியில் வராமல் கட்டுக்குள் இருந்தால் மட்டுமே கொரோனா என்கிற சங்கிலித்தொடரை உடைத்தெறிய முடியும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட்டால்தான், கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் முற்றிலும் தடுக்க முடியும். மக்கள் நடமாட்டத்தை குறைக்க போலீசாரும், தங்களது கடமையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும், விதிமுறையை மீறியவர்கள் மீது இதுவரை அபராதம் மட்டுமே விதித்து வந்த நிலையில் இனி வரும் நாட்களில் வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை எடுப்பது, வாகனங்கள் பறிமுதல், அபராத தொகையை உயர்த்தி விதிப்பது என்று அதிரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்