புயல் எச்சரிக்கை எதிரொலி மாவட்டம் முழுவதும் உஷார் நிலையில் மீட்புகுழுவினர் பலத்த காற்று வீசியதால் மரக்கிளைகள் விழுந்து மின்சாரம் துண்டிப்பு
புயல் எச்சரிக்கை எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மீட்புகுழுவினர் உஷார்நிலையில் உள்ளனர். பலத்த காற்று வீசியதால் மரக்கிளைகள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
அரபிக்கடலில் தக்தே எனும் புயல் உருவாகி இருக்கிறது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இதில் திண்டுக்கல், தேனி, உள்பட 4 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே, 4 மாவட்டங்களிலும் கனமழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின்பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தீயணைப்பு, நெடுஞ்சாலை, வருவாய் உள்ளிட்ட துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் தாலுகா அளவில் பேரிடர் மீட்புக்குழுவினர் உஷார்நிலையில் உள்ளனர்.
மேலும் மழை வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக கொடைக்கானல், தாண்டிக்குடி, ஆடலூர், சிறுமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மீட்பு பணியை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆர்.டி.ஓ.க்கள், தாசில்தார்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
பலத்த காற்று
இதற்கிடையே நேற்று மாவட்டம் முழுவதும் பலத்த காற்று வீசியது. இதனால் பல பகுதிகளில் குடிசைகள், தகர கொட்டகைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இருசக்கர வாகனங்களில் சாலையில் செல்ல முடியாத அளவுக்கு புழுதி பறந்தது. வானில் அவ்வப்போது கருமேக கூட்டங்கள் திரண்டன. இதனால் ஒருசில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.
அதேநேரம் பலத்த காற்றில் மரக்கிளைகள் முறிந்து ஆங்காங்கே மின்சார கம்பிகளில் விழுந்தன. இதனால் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பகுதியில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர்கள் இருளில் தவித்தனர்.