ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரியும் பொதுமக்கள் கொரோனா பரவும் அபாயம்
கச்சிராயப்பாளையம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரியும் பொதுமக்கள் கொரோனா பரவும் அபாயம்
கச்சிராயப்பாளையம்
தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தமிழக அரசால் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளும்வகையில் காய்கறி, மளிகை, பழம், இறைச்சி, மீன் உள்ளிட்ட சில கடைகளை பகல் 12 மணி வரை திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. அதற்கு பிறகு பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது. அத்தியாவசிய தேவைகளுக்கு வரும்போது முககவசம் அணிந்து இருக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் சிலர் அரசின் இந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு தேவையில்லாமல் ஊர் சுற்றுவது, கூடி நின்று பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கச்சிராயப்பாளையம் பகுதியிலும் பொதுமக்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் தேவையின்றி சுற்றித்திரிவதையும், அரசமரத்தடி மற்றும் சாலை ஓரங்களில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கும்பல் கும்பலாக அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பதையும் காண முடிகிறது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் தேவையின்றி சுற்றித்திரிபவர்கள், சாலையோரம் அமர்ந்து பேசுபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் நோய் தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது ஆகையால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.