கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருங்கள்
தேனி மாவட்டத்திற்கு ‘ரெட்’ அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், ‘கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருங்கள்’ என்று அரசு அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.
தேனி:
ஆலோசனை கூட்டம்
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, அது தற்போது புயலாக மாறியுள்ளது.
இதனால், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.
இதனால், இந்த 4 மாவட்டங்களுக்கும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இந்த கனமழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்தும் அரசு துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசியதாவது:-
மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் கண்காணிப்பு குழு அலுவலர்கள் மற்றும் வட்ட அளவிலான கண்காணிப்பு குழு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
வெள்ளம், மழையால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை அந்தந்த இடங்களில் தேர்வு செய்துள்ள தங்கும் இடங்களில் தங்க வைத்து, உணவு, குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
தயார் நிலை
மாவட்டத்தில் பதிவாகும் மழையளவு விவரங்களை கணக்கிட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
கனமழையை எதிர்கொள்ள அரசு அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் நீச்சல் வீரர்கள், படகுகள், பரிசல்கள், மீட்பு பணிக்கான உபகரணங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மலைச்சாலையில் மண், பாறைகள் சரிந்து விழுந்தாலோ, சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தாலோ மீட்பு பணிகளில் ஈடுபட தேவையான உபகரணங்கள், வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மழை வெள்ளம், இயற்கை பேரிடர் தொடர்பான தகவல்களை தெரிவிக்கவும், பேரிடர் கால உதவிக்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது 04546-261093 என்ற தேனி கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மேகமலை வனஉயிரின காப்பாளர் சுமேஷ்சோமன், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) தியாகராஜன், பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.