சமூக இடைவெளியை மறந்த மக்கள்
ஊட்டி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை மக்கள் மறந்ததால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ஊட்டி,
ஊட்டி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை மக்கள் மறந்ததால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
சமூக இடைவெளி
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொற்று பரவலை கட்டுப்படுத்த நகராட்சி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் காந்தி விளையாட்டு மைதானத்துக்கும், உழவர் சந்தை என்.சி.எம்.எஸ். வாகனம் நிறுத்தும் இடத்துக்கும் மாற்றப்பட்டது.
இதனால் மார்க்கெட்டில் மக்கள் நடமாட்டம், கூட்டம் கணிசமாக குறைந்து உள்ளது. இருப்பினும் காந்தி விளையாட்டு மைதானத்தில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் பலர் வருகை தருகின்றனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக கடைகளில் நின்று காய்கறிகள் வாங்குகின்றனர்.
சிலர் சரியான விதத்தில் முககவசம் அணியாததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. அங்கு பணியில் இருக்கும் போலீசார் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கடைக்காரர்களை அறிவுறுத்தி வருகின்றனர்.
தற்காலிக கூடாரம்
உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு தரையில் வட்டங்கள் குறிப்பிடவில்லை. கைகளை சுத்தம் செய்வதற்கு கிருமிநாசினி அல்லது சோப்பு வைக்கப்படவில்லை. முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மதியம் 12 மணிவரை கடைகள் செயல்பட்டாலும், தினமும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது.
தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்களை போலீசார் தடுப்புகள் வைத்து கண்காணித்து வருகின்றனர். அவர்கள் அவசியம் இல்லாமல் வெளியே வராமல் இருக்க எச்சரிக்கை விடுக்கின்றனர். தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் திறந்தவெளியில் அமைக்கப்பட்ட கடைகளில் உள்ள பொருட்கள் நனைந்து வீணாக வாய்ப்பு உள்ளது.
இதை கருத்தில் கொண்டு வியாபாரிகள் தாங்களாகவே தற்காலிகமாக கூடாரம் அமைத்து உள்ளதுடன், 12 மணிக்கு பின்னர் தார்ப்பாய் கொண்டு கடைகளை மூடி செல்கின்றனர்.
ரோந்து பணி
முழு ஊரடங்கால் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டும் மக்கள் நடமாட்டத்தை பரவலாக காண முடிகிறது. கால அவகாசம் முடிந்தும் கடைகளை மூடாமல் இருக்கும் வியாபாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, பந்தலூர், மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. கூடலூர் பகுதியில் உள்ள மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில் போலீசார் ரோந்து பணியும் மேற்கொண்டு வருகின்றனர்.