பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 2-வது தவணை கொரோனா தடுப்பூசிக்கு முன்னுரிமை

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 2-வது தவணை கொரோனா தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

Update: 2021-05-13 17:39 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 2-வது தவணை கொரோனா தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்கிடையில் நகர்புற சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா பாதிப்பு கடந்த ஓராண்டாக இருந்து வருகிறது. தற்போது 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அரசு ஆஸ்பத்திரி, நகர்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்பட்டு வருகிறது.

 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரி, சுகதார நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பொள்ளாச்சி பகுதிக்கு வரவில்லை.  கோவிசீல்டு தடுப்பூசியும் குறைந்த அளவே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 இதனால் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தற்போது பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கோவிஷீல்டு தடுப்பூசி 2-வது தவணையாக போடுபவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

நகர்புற சுகாதார நிலையங்களில் நிறுத்தம்

தடுப்பூசி ஒதுக்கீட்டிற்கு தகுந்தவாறு தினமும் 50 முதல் 150 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். சில நாட்களில் தடுப்பூசி வருவதில்லை. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பி செல்லும் நிலை ஏற்படுகிறது.

 நகராட்சி பகுதியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில்லை. இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதே நிலை தான் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார நிலையங்களிலும் நிலவி வருகிறது. 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை பகுதிகளுக்கு போதிய அளவு தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில்லை.

 இதனால் முதல் தவணை தடுப்பூசி போட்ட ஏராளமானோர் ஒரு மாதம் கடந்தும், 2-வது தவணை தடுப்பூசி போட முடியவில்லை. எனவே கூடுதலாக தடுப்பூசிகளை பொள்ளாச்சி பகுதிக்கு ஒதுக்கீடு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்