பாய்லர் வெடித்து 4 பேர் பலி: கடலூர் தொழிற்சாலையை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வு படுகாயமடைந்த தொழிலாளர்களுக்கு ஆறுதல்

பாய்லர் வெடித்து 4 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து கடலூர் தனியார் தொழிற்சாலையை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Update: 2021-05-13 17:20 GMT
கடலூர்,


கடலூர் முதுநகர் சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் பூச்சி மருந்து மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 பேர் பலியானார்கள். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஆம்புலன்ஸ், ஜீப் மூலம் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில் தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். அங்கு பாய்லர் வெடித்த இடம், சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆறுதல்

முன்னதாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 14 பேரையும் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அங்கிருந்த டாக்டர்களிடம் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எச்சரிக்கை

இந்த தொழிற்சாலையில் நடந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். மேலும் சிலர் காயமடைந்து கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுபடி அவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினேன்.
 காயமடைந்து உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் சம்பவ இடத்தையும் பார்வையிட்டு உள்ளேன். 

விபத்து பற்றி பொதுமேலாளரிடம் விவரத்தை கேட்டேன். எதிர்பாராதவிதமாக கசிவு ஏற்பட்டதாகவும், அதிக அழுத்தத்தில் ரசாயனம் வெளியேறி இருக்கிறது என்று தெரிவித்தார். 

அவரிடம், இனி இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்து இருக்கிறேன்.  இது பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் அதற்குரிய நிவாரணமும், நடவடிக்கையும் எடுப்பார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கொரோனா காலத்தில் அனுமதியில்லாமல் தொழிலாளர்களை வைத்து வேலை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சி.வெ.கணேசன் கூறினார். 

அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, அய்யப்பன் எம்.எல்.ஏ., கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், தாசில்தார் பலராமன் மற்றும் அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி

இதற்கிடையே விபத்து நடந்த இடத்தில், கடலூர் சிப்காட் தீயணைப்பு அதிகாரி வீரபாகு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீ மேற்கொண்டு பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, பெரும் விபத்தை தவிர்த்தனர். அவர்களுக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்