கோவை சித்த மருத்துவ மையத்தில் 66 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர்
கோவையில் உள்ள சித்த மருத்துவ மையத்தில் 66 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
கோவை
கோவையில் உள்ள சித்த மருத்துவ மையத்தில் 66 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
சித்த மருத்துவ சிகிச்சை
கொரோனா முதல் தொற்று அலை பரவலின் போது கொடிசியாவில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இங்கு 1800 பேர் குணமடைந்தனர். அதன் பின்னர் சித்த மருத்துவ மையம் மூடப்பட்டது.
தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.
இதனால் கோவை காந்திபுரத்தில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் 80 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மருத்துவ மையத்தில் நோயாளிகளுக்கு கபசுர குடிநீர், அமுக்கரா மாத்திரை உள்ளிட்ட பல்வேறு சித்தமருத்துவ சிகிச்சைகள் அளிக்கப் பட்டு வருகின்றன.
66 பேர் குணமடைந்தனர்
இந்த சிகிச்சை மையத்தில் தற்போது 25 ஆண், 18 பெண்கள் என 43 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 109 பேர் சிகிச்சை பெற்ற னர். இதில் 66 பேர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினர். இது குறித்து சித்த மருத்துவ மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தினமும் காலையில் நோயாளிகளுக்கு உப்பு, மஞ்சள் கலந்த தண்ணீர் மூலம் வாய் கொப்பளிக்க செய்யப்படுகிறது. இதுதவிர மூலிகை சாறு வழங்கப்படுகிறது.
தொடர்ந்து, நீராவி பிடித்தல், கபசுர குடிநீர், சிறுதானிய ரொட்டி வழங்கப்படுவதுடன் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
சித்த மருந்து தொகுப்பு
மதியம் உணவும், மாலையில் சுண்டல் அதிமதுரம பால், தாளிசாதி சூரணம், ஆடாதொடை மணப்பாகு, நெல்லிக்காய் இளகம் உள்ளிட்ட பல்வேறு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சாதாரண அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்து நலமுடன் திரும்பும் நோயாளிகளுக்கு சித்த மருந்து அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.