ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் கோவைக்கு வழங்கப்படும் அமைச்சர் அர சக்கரபாணி பேச்சு
ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் கோவைக்கு வழங்கப்படும் என்று கோவை தொழில்துறையினருடனான கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.
கோவை
ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் கோவைக்கு வழங்கப்படும் என்று கோவை தொழில்துறையினருடனான கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.
தொழில் துறையினருடன் கூட்டம்
கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் வகையில் தொழில் துறை யினர் மற்றும் கோவை மாவட்ட எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனை கூட்டம் கோவை ஆவாரம்பாளையம் கோ-இந்தியா தொழில்துறை கூட்டமைப்பு சங்க கூட்டரங்கில் நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் நாகராஜன் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். சீமா கூட்டமைப்பு தலைவர் கார்த்திக் வரவேற்றார். கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி தொடங்கிய கொரோனா நோய் தொற்று தற்போது 2-வது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக எங்களை கோவை மாவட்டத்துக்கு அனுப்பி உள்ளார்.
கூடுதல் மருத்துவ வசதி
கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிறார்கள். எனவே இங்கு கூடுதல் மருத்துவ வசதிகள் தேவைப்படுகிறது. தென்இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் ஏராளமான தொழில் முனைவோர்கள் உள்ளனர்.
கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில் மக்களை பாதுகாக்க வேண் டும். அதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த காணொலி வாயிலான கூட்டத்தில் பல்வேறு தொழில் துறையினரிடம் கேட்டுத்தான் முதல்-அமைச்சர் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அறிவித்தார். தொழில்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகத் தான் இந்த ஊரடங்கு அமலில் உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை
எந்த நோயாளிகள் வந்தாலும் தனியார் மருத்துவமனைகள் உடனடியாக சேர்க்க வேண்டும். தமிழகத்துக்கு ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பியூஸ்கோய லிடம் பேசி 280 கே.எல். பெறப்பட்டு வந்த ஆக்சிஜனை 419 கே.எல். என அதிகரித்து வாங்கி உள்ளார்.
இன்னும் கூடுதலாக பெற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தூத்துக்குடி யில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கி இருக்கிறார்கள். அங்கு 80 கே.எல். ஆக்சிஜனை உற்பத்தி செய்ய இருக்கிறார் கள்.
இந்த ஆக்சிஜன் கோவை மாவட்டத்துக்கு வர உள்ளது. மேலும் பெருந்துறை, சேலத்திலும் ஆக்சிஜனை வாங்கி வருகிறோம்.
மக்களை காக்க நடவடிக்கை
கோவை விருந்தினர் மாளிகையில் நடந்த கூட்டத்தில் தனியார் மருத்துவ மனை டாக்டர்கள் ஆக்சிஜன் வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இருக்கிறார்கள். அதை பரிசீலிப்பதற்காக கோவைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வருகிறார்கள்.
கோவை மாவட்டத் துக்கு ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதிகளை கூடுதலாக செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். மலைப்பகுதியில் இருக்கும் மக்களுக்கும் சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழக மக்களை காக்க முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பொது மக்கள் முக கவசம், அணிதல் சமூக இடைவெளியை கடைபிடித் தல், அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துதல் போன்ற தடுப்பு நடவடிக்கை களை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.