படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டால் தகவல் தெரிவியுங்கள்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவியுங்கள் என்று அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் உத்தரவிட்டுள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்தும், முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர்களிடம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை எடுத்துரைத்தார். தொடர்ந்து, தற்போது வரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் விவரம், குணமடைந்தவர்களின் விவரம், உயிரிழந்தவர்களின் விவரம், சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரம், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், கையிருப்பில் உள்ள தடுப்பூசி, ஆக்சிஜன் படுக்கை வசதி, ஆக்சிஜன் கையிருப்பு, ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி உள்ளிட்ட விவரங்களையும் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் கேட்டறிந்தனர். அதன் பின்னர் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் கூறியதாவது:-
விழிப்புணர்வு ஏற்படுத்த...
தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது. நோய் தொற்றில் இருந்து மக்களை காத்திடும் வகையில் அரசு, பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு தன்மையை விரிவாக எடுத்துரைத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு தொடர் காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டு பரிசோதனை முடிவு வரும் வரை தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நோய் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக கொரோனா பரிசோதனை முகாம்களை அமைத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதிகப்படியான முகாம்களை ஏற்படுத்த வேண்டும். மக்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏதேனும் இருப்பின் தங்களை தாங்களாகவே ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி மூலம் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்த கருவியை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்த சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள்
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். ஏதேனும் குறைகள் இருப்பின் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி குறைபாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏதேனும் இருப்பின் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும், மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கும் எடுத்துச்செல்ல வேண்டும். அதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மணிக்கண்ணன், சிவக்குமார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் குந்தவிதேவி, சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி, துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.