புதுச்சத்திரம் அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை சாவு

புதுச்சத்திரம் அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை உயிரிழந்தார்.

Update: 2021-05-13 16:55 GMT
சிதம்பரம், 

கடலூா் மாவட்டம் பண்ருட்டி காடாம்புலியூர் திடீர் குப்பம் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் புருஷோத்தமன் (வயது 25).  இவர் காடாம்புலியூர் பகுதியில் சலூன் கடை  நடத்தி வந்தார். இவருக்கு கடந்த  40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

 இந்த நிலையில் புருஷோத்தமன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அவரது மாமனார் வீடான அரியகோஷ்டி கிராமத்திற்கு சென்றார்.

டிராக்டர் மீது மோதியது

 அப்போது சிதம்பரம் -கடலூர் சாலையில் பெரியப்பட்டில் உள்ள தேவாலயம் அருகே சென்று கொண்டிருந்த போது,  முன்னால் சென்ற டிராக்டர் ஒன்று திடீரென திரும்பியது.

 இதை சற்றும் எதிர்பாராத புருஷோத்தமன், மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றுள்ளார். இருப்பினும் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. 

இதில் படுகாயமடைந்த புருஷோத்தமனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக  கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி புருஷோத்தமன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 இதுகுறித்து புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்