தூத்துக்குடி சிதம்பரநகர் மார்க்கெட் இடிப்பு
தூத்துக்குடி சிதம்பரநகர் மார்க்கெட் இடிக்கப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி சிதம்பரநகரில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த மார்க்கெட் நேற்று இடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரநகர் மார்க்கெட்
தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் டீக்கடை, ஓட்டல், மீன் மற்றும் இறைச்சி கடை, மண்பானை கடை, பிரியாணி கடை, சேர்மார்க்கெட் உட்பட 60 க்கும் மேற்பட்ட கடைகள் கொண்ட மார்க்கெட் உள்ளது.
இங்கு 35 ஆண்டுகளுக்கும் மேலாக 60க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. இங்கு உள்ள கடைகளை வியாபாரிகளே சொந்தமாக கட்டியுள்ளனர். இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடந்து வந்தது.
வணிகவளாகம் திட்டம்
இந்த இடத்தில் தற்போது மாநகராட்சி மூலம் புதிதாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகங்கள் கட்டப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. எனவே மாநகராட்சி நிர்வாகம் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளை கடைகளை காலி செய்வதற்கு வலியுறுத்தி வந்தது. மேலும் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 8-ந்தேதி மாநகராட்சி அதிகாரிகள் இந்த மார்க்கெட்டை பூட்டி சீல் வைத்தனர். இதையடுத்து மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகள் உயர்நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிபதி மார்க்கெட்டை மீண்டும் திறக்க உத்தரவிட்டார். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டை திறக்கவில்லை. இதனால் வியாபாரிகள், தங்கள் குடும்பத்தினருடன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் மீண்டும் மார்க்கெட் மாநகராட்சி அதிகாரிகளால் திறக்கப்பட்டது.
மார்க்கெட் கடைகள் இடிப்பு
இந்த நிலையில் மே 12-ம் தேதிக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என்று சிதம்பரநகர் மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் சரண்யா ஹரி உத்தரவிட்டிருந்தார். மாநகராட்சி நிர்வாகம் அளித்த அவகாசம் நேற்று முன் தினத்துடன் முடிவடைந்தது. இதனால் நேற்று மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். மேலும் கடைகள் அனைத்தும் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.