நோயாளிகளுக்கு ஊசி போட்டதால் மருந்துக்கடைக்கு ‘சீல்’
திண்டுக்கல்லில் நோயாளிகளுக்கு ஊசி போட்டதால் மருந்துகடை ஒன்றுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திண்டுக்கல்:
கொரோனா பரவலை தடுப்பதற்கு முழுஊரடங்கு அமலில் இருக்கிறது.
எனினும் அத்தியாவசிய தேவை கருதி மளிகை, காய்கறி, மருந்து கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகின்றன.
மேலும் ஊரடங்கு விதிகளை மீறும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் திண்டுக்கல்லில் ஒரு மருந்துக்கடையில் காய்ச்சல் நோயாளிகளுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளிப்பதாக திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மருந்துக்கடையில் காய்ச்சல் நோயாளிகளுக்கு ஊசி போட்டதோடு, டாக்டர் மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த மருந்துக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
அதேபோல் மேற்கு ரதவீதி, பெரியகடைவீதி ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது 6 மளிகை கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நெருக்கமாக நின்று பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.
எனவே ஒரு கடைக்கு ரூ.2 ஆயிரமும், 5 கடைகளுக்கு தலா ரூ.500-ம் அபராதமாக விதித்தனர்.
அதோடு கடைக்காரர்களை கடுமையாக எச்சரிக்கை செய்தனர்.