இதுவரை 14 ஆயிரம் டன் கரும்பு அரவை
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு இதுவரை 14 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.
உடுமலை
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு இதுவரை 14 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.
சர்க்கரை ஆலை
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ளது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாதகாலத்தை கரும்பு அரவைப்பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை அரவைக்கு தேவையான கரும்பு, விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் பதிவு செய்து கொள்முதல் செய்து கொள்வதற்காக அரசால், எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
அதன்படி உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், பழனி ஆகிய தாலுகாக்களில் உள்ள பகுதிகளில் இருந்து ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், நெய்க்காரப்பட்டி, பழனி ஆகிய கோட்ட கரும்பு அலுவலகங்கள் மூலம் கரும்பு விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு, ஆலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
பதிவு
அதன்படி 2020 2021ம் ஆண்டு கரும்பு அரவைப்பருவத்திற்கு 622 விவசாயிகளிடமிருந்து 695 ஏக்கர் கன்னி கரும்பும், 1005 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 1700 ஏக்கர் கரும்பு பதிவாகியுள்ளது. இதன்மூலம் ஆலை அரவைக்கு 71 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகளை அணுகி, அவர்கள் பயிரிட்டுள்ள, பதிவு செய்யப்படாத கரும்புகளையும் ஆலை அரவைக்கு கேட்டு பெற திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
கரும்பு அரவை
இந்த நிலையில், ஆலையில் 2020 2021 -ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை தொடக்க விழா கடந்த மாதம் 16ந் தேதி தொடங்கியது. அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும், தொடர் செயல்முறை தொழிற் சாலைகளுக்கும், இரவு நேர பொது ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் பட்டியலில் சர்க்கரை ஆலைகள் வருவதால் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது.
இந்த ஆலையில் நேற்று காலை 6 மணிவரை 14 ஆயிரத்து 130 டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. சராசரியாக சர்க்கரை கட்டுமானம் 8.30 சதவீதம் கிடைக்கிறது.
இந்த ஆலையில் 2020 2021ம் ஆண்டு அரவைப்பருவத்தில் அரவை செய்யப்படும் கரும்பிற்கு டன் ஒன்றிற்கு அரசின் குறைந்தபட்ச ஆதாரவிலையாக ரூ.2 ஆயிரத்து 707 மற்றும் 50 பைசா என்று அரசு நிர்ணமித்துள்ளது. அத்துடன் அரசு கூடுதலாக ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயித்து வழங்கப்படுவது போன்று 2020 2021ம் ஆண்டு அரவை பருவத்தில் அரைக்கப்படும் கரும்பிற்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.